Monday, August 29, 2016

வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை



வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை
எழுத்தாளனக்கு தேவையானதெல்லாம் தான் சுதந்திரமாக எழுதுவதற்கான ஒரு பத்தி அவ்வளவுதான். அதில் அவன் நினைப்பது அனைத்தும் எழுதப்படுகிறது. அந்தப் பத்தி எந்த ஒரு கட்டுப்பாட்டையும் எழுத்தாளன் மீது விதிக்காது. தன் சுதந்திரம் முழுவதும் அந்த குறிப்பிட்ட பத்திக்குள் கட்டற்று செயல்பட ஆரம்பிக்கிறது. பொதுவாக வார மற்றும் மாத பத்திரிக்கைகளில் ஒதுக்கப்படும் பத்திகள் சிறுகதைகளுக்காகவும், கட்டுரைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும், மற்றும் மதிப்புரைகளுக்காகவும் இருக்கின்றன. அந்த பத்திகள் சுதந்திர சிந்தனைக்கான அடக்குமுறையாகும். இவைகள் எழுத்தாளனை இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரு வடிவத்திற்குள் கட்டுப்படுத்துகின்றன. அவனை ஒரு வகையான எழுத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடைத்து விடுகின்றன. அதற்காக இவைகள் கூடாது என்றல்ல. இவைகள் கட்டாயமானவைகள். சுதந்திரமானவைகள் அல்ல. எனினும் படைப்பு என்பதை இந்த குறிப்பிட்ட வகைமையின் வடிவத்தில் தான் எழுத வேண்டும் என்று வற்புறுத்த முடியாது.
ஒரு பக்கத்தில் வடிவங்களுக்காக படைப்புகள் உருப்பெறுகின்றன. மற்றொரு பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை நினைத்து எழுத்து அந்த வடிவத்தை நோக்கி பயணிக்கிறது. கடைசியில் அது அந்த முன் தீர்மாணிக்கப்பட்ட வடிவமாகிறது. முன் தீர்மாணிக்கப்பட்ட வடிவமும் சரி அல்லது எழுத்து தான் அடையப் போகும் வடிவமும் சரி அவைகள் எழுத்தாளனாள் தீர்மாணிக்கப்படுவது அல்ல. எழுத்து ஒரு கட்டுப்பாட்டில் தன்னை முடக்கிக் கொள்கிறது. உண்மையில் வார்த்தைக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. வார்த்தை கோருவதெல்லாம் ஒரு சுதந்திரமான வெற்றிடம். அங்கு சுதந்திர வெற்றிடம் அந்த வார்த்தை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. வார்த்தை தன்னளவில் கட்டற்ற நிலையில் ஒரு மாபெறும் பிரபஞ்சத்தை தன்னுள் வைத்திருக்கிறது. அது கோருவது ஒன்று மாத்திரமே ஒரு வெற்றிடம் அவ்வளவுதான். அந்த வெற்றிடத்தை நிறப்ப அந்த வார்த்தை தன்னை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுக்கும் விஸ்தரித்துக் கொள்கிறது.
எழுத்தாளன் தான் சாதிக்க தேவையானது ஒரு பிரம்மாண்டத்தை உருவாக்க ஒரு வெற்றிடம் மாத்திரமே. ஒரு சிறு அளவிலான இடத்தை ஒதுக்கி அதில் பிரம்மாண்டம் என்று ஒன்றை கட்டமைக்க சொன்னால் அதில் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும். பத்திரிக்கைகளில் இது போன்ற ஒரு வெற்றிடம் அவசியப்படுகிறது அதன் பெயர் என்னவென்று அவ்வளவு எளிதில் வவரையறுத்து சொல்லிவிடமுடியாது. அது கொடுக்கும் இடம் ஒரு நூறு வார்த்தைகளுக்கான இடமாகக் கூட இருக்கட்டும் ஆனால் அது வெற்றிடமாக இருக்கட்டும். அந்த வெற்றிடம் ஒரு ஜனநாயகத்தின் வெற்றிடமாக இருக்கட்டும். எழுதப்படும் நூறு வார்த்தைகள் சுதந்திரத்தின் வார்த்தைகளாக இருக்கட்டும். அது சட்டத்திற்கு கீழ்பட்டதாக இருக்க கூடாது. சட்டபுத்தகம் அதன் எழுத்து அளவில் கணிக்க முடியாதவை அங்கு வார்த்தைக்கு ஜனநாயகம் கிடையாது. அந்த வார்த்தை சட்ட வரையறைக்குள் மண்டியிட்டு கிடக்கும் அடிமை அவ்வளவுதான். ஆனால் இந்த வார்த்தை இயங்கும் மிகச் சிறிய வெற்றிடம் செயல்பாட்டில் இப்பிரபஞ்சத்தைக் காட்டிலும் மிகப் பெரிய உலகத்தை தன்னுள் வைத்திருக்கிறது.
தாஸ்தாவஸ்கிக்கு அப்படிப்பட்ட ஒரு வெற்றிடம் தரப்பட்டது. அதனை எதோ ஒன்றென்று பெயரிட்டு அழைத்தாக வேண்டுமே. எனவே அது எழுத்தாளனின் நாட்குறிப்பு என்று பெயர் வைத்து விட்டார்கள். அந்த சுதந்திர வெளிதான் அவரது வார்த்தைகள் வெறும் எழுத்து நிலையில் இருந்து படைப்பு நிலையை எட்டியது. அந்த வெட்டவெளிதான் இரண்டு நிலைகளிலான வார்த்தையை தீர்மானிக்கிறது. ஒரு நிலையில் அது வெறுமனே ஏதோ ஒன்றை குறிப்பிடப் பயன்படும் வார்த்தை. மற்றொரு நிலை கவிதையின் நிலை. அது ஒரு சொல்லாக இருக்கட்டும் வாக்கியமாக இருக்கட்டும் - அது கவிதை. அதை சாத்தியமாக்கியது அந்த வெற்றிடம். தனக்கு அந்த பத்திரிக்கையில் ஆசிரியர் பணி கிடைத்த உடன் தான் என்னவோ ஒரு மாபெரும் சீன சாம்சாஜ்யத்திற்கே அரசனானது போன்று பெருமைப் பட்டுக் கொண்டார். காரணம் தனக்கு கிடைத்திருக்கிற அந்த சுதந்திர வெளி அதில் அவர் எழுத்தை முழுவதும் கட்டுப்பாடின்றி உலாவவிட்டார். அந்த இடம் உருவாக்கியதுதான் இன்றைய நவீன பேரிலக்கியம். அது வடிவமற்றது. எனினும் அதை வார்த்தை என்றளவில் கவிதை என்று வறையறுத்து விட முடியும். அதில் அவர் ஒரு வடிவத்தை மனதில் கொண்டு படைப்பை உருவாக்கவில்லை மாறாக வார்த்தை தன் வடிவத்தை உருவாக்கி கொண்டது. வெண்ணிற இரவுகள் போன்ற கதைகள் இந்த சுதந்திர வெளியில் தான் தன் கவிதை என்ற வடிவத்தை உருவாக்கிக் கொண்டன.

இந்த எழுத்தாளனின் நாட்குறிப்பு பத்தி மாத்திரமே வார்த்தையை அதன் போக்கில் தன் வடிவத்தை தீர்மாணித்துக் கொள்ள அனுமதி அளிக்கிறது. வார்த்தைதான் அதன் வடிவத்தை தீர்மாணிக்க வேண்டும். அதற்காக அந்த நாட்குறிப்பு பகுதியில் அவன் செய்ய வேண்டியதெல்லாம் அந்தப் பகுதியில் தன் விருப்பு வெறுப்புகளை வார்தைப்படுத்தவேண்டும். திடீரென்று அது உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கும் மீறி உண்ணதமாக உருவெடுக்கும். அந்தத் தருணம் எப்போது நடைபெறும் என்பது எழுத்தாளனுக்கும் தெறியாது எழுத்துக்கும் தெரியாது. ஆனால் வார்த்தையில் காத்திருக்க வேண்டும். அந்த காத்திருப்பிற்கான இடத்தை பத்திரிக்கையின் மற்ற பத்திகள் அனுமதிக்காது. கூர்க்காவை போன்று துரத்தி அடித்து விடும். வேகமாக வேலையை செய்து விட்டு நேரம் முடிந்தவுடன் கடையைக் கட்ட வேண்டும்.   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...